மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘வெள்ளை டி-சர்ட் இயக்கம்’ ஒன்றை தொடங்கியுள்ளார். பொருளாதார மற்றும் சமூக சமத்துவம், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நமது நாட்டில் நடைபெறும் அனைத்துவிதமான மத, இன பாகுபாடுகளையும் புறந்தள்ளும் வகையில் இந்த இயக்கத்தில் பங்கேற்று அதற்கான அடையாளமாக அனைவரும் வெள்ளை உடை அணிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக, பொருளாதார இடைவெளியை நிரப்பும் எண்ணத்துடன் நடத்தப்பட்ட ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் தொடர்ச்சியாக இப்படியொரு இயக்கத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக மேம்பாட்டுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் தலைவர்கள், தங்களது அரசியல், சமூக கருத்துகளை கடைக்கோடி மக்கள்வரை கொண்டு செல்ல ஆடையை ஆயுதமாக பயன்படுத்திய பல முன்னுதாரணங்கள் உண்டு.