நெல்லை: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு இன்று பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி தெரிவித்துள்ளார். அனைத்து எஸ்பிக்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டத்தையும் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சந்தேகப்படும் நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி கேட்டு கொண்டுள்ளார்.
நெல்லை மாநகரை பொறுத்தவரை டவுன் நெல்லையப்பர் கோயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட அளவில் விஜயநாராயணம் கடற்படை தளம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின்நிலையம் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட ஆலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்; திருச்செந்தூர், நெல்லை, குமரியில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.