சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி, நெல்லை, சேலம், தர்மபுரி, கோவை, மதுரை, வேலூர், தஞ்சை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, திருச்செந்தூர் உட்பட மாநில முழுவதும் மக்கள் அதிக கூடும் சுற்றுலா தளங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது. கடலோர மாவட்டங்களில் வெளி நபர்கள் ஊடுருவுகிறார்கள என தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர காவல்படை வீரர்களில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம்-கேரளா, தமிழகம் -கர்நாடகா, தமிழகம் -ஆந்திரா ஆகிய எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இங்கு நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மக்கள் அதிகளவில் சென்று பார்வையிடுகிறார்கள். அங்கு நடுக்கடலில் கண்ணாடி மேம்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக போலீசாரின் இரு சக்கர வாகன ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கன்னியாகுமரியை சுற்றி உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடந்தது. நேற்று படகுதுறைக்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டார்கள். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. கடலோர காவல் படை போலீசாரும், நவீன படகில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்ற சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
The post காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: துப்பாக்கியுடன் போலீஸ் ரோந்து; வாகன சோதனை; கடலோர காவல் படையும் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.