ஜெனிவா: எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லை என்று காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் (UNHRC) 58வது அமர்வின் ஏழாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான வார்த்தை மோதல் உருவாகியுள்ளது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தலைவர்கள், அதிகாரிகள் அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களை பாகிஸ்தான் தூண்டி வருகிறது. அதே நேரத்தில் அதன் சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டது. பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.
மேலும் பாகிஸ்தானை உயிர்வாழ சர்வதேச உதவியை நம்பியிருக்கும் “தோல்வியடைந்த நாடு” எனவும் தியாகி காட்டமாக விமர்சித்தார். ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிக்கிறது. பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
The post காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தான்.. தோல்வியுற்ற நாடு எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய தகுதி இல்லை: ஐ.நா.வில் தக்க பதிலடி கொடுத்த இந்தியா!! appeared first on Dinakaran.