போரூர்: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய நடிகர் பாபி சிம்ஹாவின் சொகுசு கார் மோதி 7 பேர் படுகாயமடைந்தனர். சென்னை மணப்பாக்கத்தில் நடிகர் பாபிசிம்ஹா வசித்து வருகிறார். இவரது கார் டிரைவராக பெரம்பலூர் மாவட்டம் காலனி வாசல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (39) என்பவர் உள்ளார். இவர், மணப்பாக்கத்தில் உள்ள நடிகர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடிகரின் உறவினரை சொகுசு காரில் கோயம்பேடு பகுதியில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து, டிரைவர் வீடு திரும்பியுள்ளார். கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து மணப்பாக்கத்துக்கு செல்வதற்காக போரூர் வழியாக இறங்காமல் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்ற டிரைவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரை திருப்பிக்கொண்டு கத்திப்பாரா மேம்பாலத்தில் ஏறி போரூருக்குச் செல்லும் பாதையில் இறங்கியபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 3 பைக்குகள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் நிற்காமல் சென்ற சொகுசு கார், தடுப்புச்சுவரில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த முத்துசாமி (42), நூக்கம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (32), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (59), குரோம்பேட்டையைச் சேர்ந்த புருஷோத்தமன், கே.கே.நகரைச் சேர்ந்த ஆராதனா (30) உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அகிலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், நடிகரின் சொகுசு காரை பறிமுதல் செய்து, விசாரித்தனர். அப்போது, டிரைவர் போதையில் காரை ஓட்டி வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து புஷ்பராஜை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
குடிபோதையில் போரூர் செல்லும் பாதையில் இறங்காமல் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நடிகரின் காரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
The post கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி 7 பேர் காயம்: போதை டிரைவர் கைது appeared first on Dinakaran.