புதுடெல்லி: கல்வியறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்திரி கூறியதாவது: கிராமங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் கடந்த 2011-ம் ஆண்டில் 67.77 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் ஆண்டில் 77.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் இதே காலத்தில் 57.93 சதவீதத்திலிருந்து 70.4 %-ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற ஆண்களின் சதவீதமும் 77.15 சதவீதத்திலிருந்து 84.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமங்களில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க சமக்ர சிக்ஷா திட்டம், சாக்ஸர் பாரத், பதானா லிகானா திட்டம், யுஎல்எல்ஏஎஸ் – நவ் பாரத் சாக்ஸரத்தா நிகழ்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டங்கள் கல்வியறிவில் பின்தங்கியுள்ள கிராமங்களில் நல்ல பலனை அளித்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.