சென்னை: கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார். மேலும் மக்கள் நல பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக முதல்வருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் இ.பெரியசாமி பதிலளித்துப் பேசியதாவது: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். கடந்த 4 ஆண்டுகளில் ரூ,1,122 கோடி செலவில் 3,766 அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.