கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே உள்ள வள்ளுவர் புரம் கிராமத்திற்கு அரசு பஸ் சேவை கேட்டு 35 ஆண்டுகளாக பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் நிறைவேறவில்லை. அரசு இதுகுறித்து பரிசீலித்து அருகில் உள்ள பகுதிகளுக்கு வரும் பஸ்களை தங்கள் பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்திற்குட்பட்டது வள்ளுவர் புரம் கிராமம். இங்கு, 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஜவுளிகடை, பாத்திரக்கடை, வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
வள்ளுவர் புரம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள் எம்.சி.பள்ளி, வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். கல்லூரிக்கு செல்வோர் கிருஷ்ணகிரிக்கு மட்டுமே வந்து செல்லும் சூழல் உள்ளது.
ஆனால், இவர்கள் சென்று வர முறையான பேருந்து வசதி இல்லை. மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
கடந்த, 35 ஆண்டுக்கு முன்பு வழித்தட எண் 45 நகர பஸ் கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, வள்ளுவர் புரம் வழியாக எம்.சி. பள்ளிக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவை நாளொன்று 4 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
பஸ் சேவை தொடங்கியபோது, 500 பேர் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்போது 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையிலும், அந்த ஒரு பஸ்சை மட்டுமே நம்பி இருக்கும் அவல நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பேருந்து சேவை இல்லாமல் அருகிலுள்ள பகுதிகளுக்கு 3 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலம் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட பேருந்துக்காக பலமணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. வள்ளுவர்புரத்திற்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டாலும் அது சரிவர வருவதில்லை.
கிருஷ்ணகிரியிலிருந்து 29,32. 24, 56, 51, 64. 66ஏ ஆகிய நகரப் பேருந்துகள் 2 கிமீ அருகிலுள்ள எம்.சி. பள்ளிக்கு இயக்கப்பட்ட போதும், வள்ளுவர்புரத்திற்கு ஒரு கூடுதல் பேருந்து சேவை கூட வழங்கப்படவில்லை.
மேற்குறிப்பிட்ட பஸ்கள் கிருஷ்ணகிரியிலிருந்து 25க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன. ஆனால், வள்ளுவர் புரத்திற்கு நாளொன்றுக்கு 4 முறை மட்டுமே ஒரே ஒரு பஸ் மட்டும் வந்து செல்லும் அவலம் உள்ளது.
குறிப்பாக, 29 வழித்தட எண் கொண்ட பஸ் காலையில், 7 மணி, 8.45 மணி மற்றும் மாலை 4 மணி, 5.45 மணிக்கு எம்.சி. பள்ளியில் சுமார் இருபது நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது. இந்த பஸ் சேவையையாவது காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது வள்ளுவர் புரம் வரை நீட்டித்தால் மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவர். எங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களில், 3 பஸ்களையாவது எங்கள் பகுதிக்கு நீட்டித்து தர வேண்டும்.
இதுகுறித்து பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பரிசீலித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post கிருஷ்ணகிரி அருகே வள்ளுவர் புரத்தில் 35 ஆண்டுகளாக போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.