கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சுரேஷின் செல்போனில், ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஆணும், 30 வயதுடைய பெண்ணும் கடந்த 19ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மலைக்கு சென்றனர். அப்போது மலை உச்சியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி நகை பணத்தை வழிப்பறி செய்தனர். அவர்களில் 2 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும், அதை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக், கலையரசன் என்ற 2 பேரை கைது செய்தனர். போலீசிடம் இருந்து தப்ப முயன்ற சுரேஷ்(22) என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர். நாராயணன் என்பவர் போலீசிடம் இருந்து தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. இதில், சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, சுரேசின் செல்போனை ஆய்வு செய்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள், அந்த பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் இளம்பெண்கள் சிலரும், கல்லூரி மாணவிகள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காதலர்களுடன் மலைப்பகுதிக்கு தனியாக வருபவர்களை கண்காணித்து, அவர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததுடன், அந்த இளம்பெண்களை பலாத்காரம் செய்யும் கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சுரேசின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எந்த தேதியில் எடுக்கப்பட்டவை என விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விவகாரத்தில் சுரேசுடன் இந்த 3 பேர் மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கு தொடர்புகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன், சுரேசின் செல்போனில் இருந்த இளம்பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்களை அவர், சிலருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
The post கிருஷ்ணகிரி பெண் கூட்டு பலாத்கார வழக்கு கைதான 4 பேரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்: பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்தது அம்பலம் appeared first on Dinakaran.