நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கோட்டார் ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதன்படி, உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்றிரவு கூட்டு திருப்பலி நடந்தது.
பங்குதந்தை அற்புதராஜ் தலைமையில் இரவு 11.30 மணிக்கு விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு பேராலய அதிபர் இருதயராஜிடம் வழங்கப்பட்டது. சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் அங்கு கூடி இருந்த பக்தர்களிடம் குழந்தை ஏசு சொரூபத்தை தூக்கி காண்பித்து, ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவை வைத்து, பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மன்றாட்டு, நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது. பிரசித்தி பெற்ற கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நடந்த கிறிஸ்து பிறப்பு பிரார்த்தனையில் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்றார். நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து பிறப்பு அறிவிக்கப்பட்டு தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிலில் இயேசு கிறிஸ்து பிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் அசிசி தேவாலயம், கிறிஸ்து அரசர் ஆலயம் உள்பட நாகர்கோவில், கன்னியாகுமரி நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலையில் கிறிஸ்து பிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி சின்னகோவில் எனப்படும் திருஇருதயங்களின் பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர். தூத்தக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை அமல்ராஜ் தலைமையிலும், யூதாததேயூ ஆலயத்தில் பங்கு தந்தை அருமைநாயகம் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனைகள் நடந்தன.
The post கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்; வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கோட்டார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.