மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதாராணியை தகுதி நீக்கம் செய்ய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஐயப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமுதராணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவரது மகளுக்கு கிறிஸ்தவர் (பிற்படுத்தப்பட்டோர்) என ஜாதிச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இவர், கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, பட்டியலினத்தவருக்கு (பொது) ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இது சட்டப்படி தவறு. ஆகவே தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும், “இவ்வாறு தெரிவித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, “பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அமுதராணியின் வெற்றி செல்லாது. கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம். அரசியல் கட்சியின் பகடைக்காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறி, தேர்தல் ஜனநாயகத்தையே கேலி கூத்தாக்குகின்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம் : ஐகோர்ட் appeared first on Dinakaran.