கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூரில் இன்று காலை திடீரென பெய்த மழைக்காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மூட்டை நெல் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு கீழ்பென்னாத்தூர், கொளத்தூர், வேடநத்தம், மேக்களூர், கீக்களூர், நாரியமங்கலம், கார்ணாம்பூண்டி, சோமாசிபாடி, பொலக்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, உளுந்து, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விவசாய பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். இதனால் இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகளவு நெல் வரத்து இருந்ததால் குடோன்கள் நிரம்பியது. இதனால் வெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதமானது. மழையால் நெல்மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லை எடை போட்டு கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் போதிய இடவசதியும் இல்லை. இதனால் வெட்ட வெளியில் நெல் மூட்டைகளை வைக்க வேண்டியுள்ளது. இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளியூர் வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. விவசாயிகளின் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. விலை பட்டியல் மிகவும் தாமதமாக ஒட்டப்படுகிறது. விவசாயிகளின் விலை பொருட்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. எனவே விவசாயிகள், நெல் மூட்டைகளை முழுமையாக பாதுகாக்க நிரந்தரமாக கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டை மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.