புஜ்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது. இந்நிலையில் 33 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.