சென்னை: “குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வழக்கம் போல, கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக, வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட்.