சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதனால் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகளில் ஒன்றாக குஜராத் அணி நிறைவு செய்வதற்கான வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. 25-ம் தேதி நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே உடன் விளையாடுகிறது. அதில் அந்த அணி வெற்றி பெற வேண்டி உள்ளது. அது நடந்தால் குஜராத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.