பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அசாமிலும் திரிபுராவிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அத்துடன், அசாமில் உள்ள ஆறு சமூகங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அடுத்தடுத்து காய் நகர்த்திவரும் பாஜகவின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. அசாமில் பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த அசாம் கண பரிஷத் இந்த மசோதாவைக் கண்டித்து கூட்டணியிலிருந்தே வெளியேறியிருப்பது பாஜகவுக்குத் தற்காலிகப் பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களவையில் நிறைவேறியிருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-க்கு முன்னால் இந்தியாவில் புகலிடம் தேடி வந்த இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. இந்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 1971-ல் வங்கதேச விடுதலைக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து வெளியேறி அசாம், திரிபுராவில் குடியேறிய வங்காளி இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கும் தந்திரமே இது என்று அவ்விரு மாநிலத்தவரும் கொதிப்படைந்துள்ளனர்.
வங்கதேச விடுதலைப் போரின்போது அகதிகளாக வந்து குடியேறியவர்களின் சுமை முழுவதையும் அசாமே தாங்க வேண்டியிருக்காது என்று பாஜக உறுதியளித்துவந்த நிலையில், இம்மசோதாவின் நோக்கம் முற்றிலும் மாறாக இருப்பதாக அம்மாநிலத்திலிருந்து அதிருப்திக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ‘அகதிகளை அதிக மக்கள்தொகையில்லாத பகுதிகளில் குடியமர்த்த அசாம் அரசு உதவ வேண்டும். ஏற்கெனவே மக்கள் அடர்த்தியுள்ள பகுதிகளில் சுமையை ஏற்றக் கூடாது’ என்று ராஜேந்திர அகர்வால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் தன்னுடைய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அசாம் கண பரிஷத் கட்சியின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
இதற்கிடையே, 1985-ல் கையெழுத்தான அசாம் உடன்படிக்கையின் 6-வது பிரிவைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது பாஜக அரசு. ஆறு பெரிய சமூகங்களுக்குப் பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்கவும் முடிவுசெய்திருக்கிறது. இந்தச் சமூகங்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ளனர். இந்நடவடிக்கைகள், உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுவதாக பாஜக சொல்லிக்கொண்டாலும், தேர்தல் கணக்குகளைக் குறிவைத்து அக்கட்சி இதில் இறங்கியிருக்கிறது என்றே தெரிகிறது.
ஆறு சமூகங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குவதன் மூலம், 34% முஸ்லிம்களைக் கொண்ட அசாமை, பழங்குடிகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாற்றுகிறது பாஜக அரசு. சட்ட மன்றத்திலும் உள்ளாட்சி மன்றங்களிலும் பழங்குடிகளுக்கு அதிகத் தொகுதிகளை ஒதுக்கும் திட்டம் இது. 2014-ல் மொத்தமுள்ள 14 அசாம் மக்களவைத் தொகுதியில் பாஜக 7 இடங்களில் வென்றது. 2019 மக்களவைத் தேர்தலில் அதே அளவு தொகுதிகளைத் தக்கவைப்பது கடினம் என்பதால், இப்படியான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இவை, அசாமில் புதிய இன, மத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று எழும் குரல்களை பாஜக தலைமையிலான அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.