குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அறிவிக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தல் அடிப்படையில், இது தொடர்பாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சரத் பவாரை சந்தித்து, மல்லிகார்ஜூன கார்கே பேசி உள்ளார். எனினும் எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் சிங், தொலைபேசி வாயிலாக, சரத் பவாரிடம் பேசியதாகவும், அப்போது அவருக்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. சரத் பவாருக்கு ஆதரவு தரக் கோரி, சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரிடம், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, வரும் புதன்கிழமை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சரத் பவார், பல கூட்டணிகள் மற்றும் கூட்டணி அரசுகளை உருவாக்கியதில் பெருமைக்குரியவர். அவர் மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியை உருவாக்கினார். பாஜகவை தோற்கடிக்க சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளான சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.