சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதிமுக, பாஜ, தமாகா, தேமுதிக கட்சியினர் மட்டும் பங்கேற்றனர். நாட்டின் 76வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் தலைவர்களுக்கு கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதேபோன்று, கவர்னரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் நேற்று மாலை கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். பாமக சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு அரசும் தேநீர் விருந்தை புறக்கணித்தது. மேலும் நாதக, தவெக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்பி பாலகங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜ சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் சரத்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக எல்.கே.சுதீஸ், பார்த்தசாரதி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதிகள், தியாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்திய அரசியல் அமைப்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கும் நீதி, தன்னுரிமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை மேற்கொள்காட்டி ராக் அகாடமி சார்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதனை அனைவரும் கண்டு ரசித்தனர்.
* கொடிநாள் நிதி வசூலில் முதலிடம்
அதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டில் கொடிநாள் நிதி அதிகம் வசூலித்த மாவட்டங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்கள் பெற்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரியிடமும், மாநகராட்சியில் கோவை மாநகராட்சி கமிஷனருக்கும் சுழற்கோப்பைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல், அதிகளவில் கொடிநாள் நிதி பங்களிப்பு வழங்கிய சென்னை, பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு விருதுகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு, அதிமுக, பாஜ, தேமுதிக பங்கேற்பு appeared first on Dinakaran.