புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதையடுத்து, அப்பதவிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ம் தேதி நிறைவு பெற்றது. ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர் களமிறங்கினர்.