தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான வெண்ணிலாவை (சான்வே மேகன்னா) அவசர அவசரமாக இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக வீட்டை புதுப்பிக்க விரும்பும் அப்பா (ஆர்.சுந்தர்ராஜன்), ஏரியா பெண்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மா ஆகியோர் அடங்கிய லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றுகிறார் நவீன். இன்னொரு புறம் எந்நேரமும் தன்னுடைய அந்தஸ்தை வைத்து ஹீரோ குடும்பத்தை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் ஹீரோவின் அக்கா கணவர் (குரு சோமசுந்தரம்).
பெரியளவில் சிக்கல் எதுவுமின்றி நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் ஹீரோவின் வாழ்க்கையில் தனது அலுவலகத்தின் க்ளையன்ட் ஆக வரும் நகைக்கடைக்காரரால் புயல் வீசத் தொடங்குகிறார். அவருடனான ஒரு பிரச்சினையால் ஹீரோ வேலையை விட்டு துரத்தப்படுகிறார். வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்ல பயந்து ஏராளமான கடன் வாங்குகிறார். வட்டி குட்டி போட்டு பல்கிப் பெருகி கழுத்தை நெறிக்க இறுதியில் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே ‘குடும்பஸ்தன்’ சொல்லும் கதை.