சென்னை: தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி,வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்ட பென் டிரைவ் மூலமாக வழங்குவதாக தெரிவித்தனர். அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பென் டிரைவ் முறையில் வழங்குவதற்கு ஆவண சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜரான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் ஆகிய 14 பேருக்கு சிபிஐயின் கூடுதல் குற்றப்பத்திரிகையை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், வழக்கில் ஆஜராகதவர்கள் அடுத்த விசாரணைக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து விசாரணை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.