குன்னூர்: மருத்துவ குணம் நிறைந்த அத்திபழம் சீசன் குன்னூரில் துவங்கிய நிலையில், மலைப்பாதையில் கொத்து கொத்தாக அத்திபழங்கள் காய்த்து குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் அரியவகை பழங்களும், மூலிகை செடிகளும் காணப்படுகிறது. இது நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் குன்னூர் மலைப்பாதையில் சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் அத்திமரங்கள் உள்ளன. தற்போது, இந்த மரங்களில் அத்திப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை பறித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அத்திப்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என்பதால் அதனை பலரும் வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக அத்தி மரங்கள் களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரக்கூடிய தன்மையுடையது. அத்திப்பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி. அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும்.
மேலும், பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 800 பழங்கள் வரை கிடைக்கும். இதன் கனிகளை உலர வைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம் அத்திப்பழம் உண்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன், தலைமுடியும் நீளமாக வளர்வதாகவும் கூறப்படுகிறது. தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். இதுதவிர சிறுநீர்ப்பை புண், சிறுநீர் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றையும் நீக்குவதாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்த சீசன் களைகட்டியுள்ள நிலையில், மரங்களில் அறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது.
The post குன்னூரில் கொத்து கொத்தாக காய்த்து குலுங்கும் அத்திப்பழங்கள் appeared first on Dinakaran.