குன்னூர் : குன்னூர் அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளை உள்ளடக்கிய மலையோர பகுதிகளில் குரங்குகள் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு வகை சார்ந்த குரங்குகள் இருந்தாலும், பரவலாக தென்படும் நாட்டு குரங்குகளே அதிகம் தொல்லை தருகின்றன.
முதலில் மலையோர பகுதிகளில் மட்டுமே வலம் வந்த குரங்குகள் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் உணவு, தண்ணீர் தேவைகளுக்காக கணிசமாக வர தொடங்கியுள்ளன. இவ்வாறு வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அத்துடன் சில பகுதிகளில் வயதான முதியோர்களையும் குரங்குகள் தாக்குகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா அருகேயுள்ள லீமா நர்சரி குடியிருப்பு பகுதியில் உலா வரும் குரங்குகளால் மக்கள் சிரமமடைந்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. துவைத்து காயப்போடும் துணிகளை கிழித்து விடுவதாகவும், திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து காய்கறி மற்றும் பழங்களை சூறையாடி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post குன்னூர் அருகே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.