குன்னூர்: குன்னூர் மார்க்கெட் கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விடியவிடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும், 14 கடைகள் எரிந்து சேதமானது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு மார்க்கெட் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் 10.30 மணி அளவில் அழகு சாதன பொருட்கள் விற்கும் ஒரு கடையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென கடைகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் மார்க்கெட் வளாகத்தில் அனைத்து கடைகளும் அடுத்தடுத்து ஒட்டிய நிலையில் இருந்ததால், தீ மளமளவென 14க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பரவியது. தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் பற்றாக்குறையால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு துறையினர் திணறினர்.
மேலும் அருகிலுள்ள கடைகளுக்கும் தீ பரவி எரிந்தால் பொதுமக்களும் வியாபாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், ஊட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். 28 தீயணைப்பு வீரர்கள் விடியவிடிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அதிகாலை 3 மணியாகியது.
இந்த தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகளும், அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டது. அதற்குள் நகை கடைகள், துணி கடைகள் உட்பட 14 கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இந்த விபத்து தொடர்பாக குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குன்னூர் மார்க்கெட்டில் இரவில் பயங்கர தீ: 14 கடைகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.