சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன் ? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும் ? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.