*கருத்தடை பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மாதம் தோறும் 1500 பேர் வரை நாய்கடிக்கு ஆளாகின்ற நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக பொதுமக்களை நாய்கள் கடிப்பது அதிகரித்துள்ளது. நித்திரவிளை அருகே கடந்த சில நாட்களாக 50 க்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களை கருத்தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. சில அமைப்புகள் நாய்களுக்கு கருத்தடை செய்வதாக கணக்கு காண்பிக்கும் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாய்கள் கொல்லப்படுவது குற்றம் என்ற நிலையில் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவை பல்கி பெருகி வருகின்றன.
தெரு நாய்களுக்கு மக்கள் வீடுகளில் உள்ள கழிவு உணவுகளை கொட்டி வைக்கின்றனர். இதனால் தெரு நாய்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நாய்கள் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விசுவாசமாக இருப்பதுடன் மற்றவர்களை கடித்து பெரும் தொல்லை வழங்குவதாக உள்ளது. நாய்கள் வளர்க்க விரும்புகின்றவர்கள் தங்கள் வீட்டின் காம்பவுண்டிற்கள் வளர்ப்பது சிறந்தது. ஆனால் தெருவில் வளரும் நாய்களை ஊக்குவிக்க கூடாது. ஒரு பகுதியில் தொடர்ந்து உணவு கிடைக்கும்போது நாய்கள் அங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்து எண்ணிக்கை பெருகிவிடுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க ஏபிசி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் நாய்கள் பெருகுவது குறையும். அப்போது தடுப்பூசியும் போடப்படும் என்பதால் வெறிநோய் வைரஸ் உடலில் இருந்தால் அதுவும் அழிக்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் எங்கும் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டபோது அவர்கள் கூறியது:
குமரி மாவட்டத்தில் மாதம் தோறும் 1500 பேர் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். வெறிநாய் கடி காரணமாக நடப்பாண்டில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரேபிஸ் ஆக இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளது ஆகும். நாய் கடித்தும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கவனக்குறைவாக இருந்ததால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நாய் கடிக்கு தடுப்பூசி செலுத்தாத போது 50, 60 நாட்களை கடக்கும்போது அது மூளையை பாதிக்கும்.
மூளையை பாதிக்கும் வரை நமக்கு ஏதும் தெரியாது. நாம் இயல்பாகவே இருப்போம். அதன் பின்னர் அவரை காப்பாற்ற உலக அளவில் கூட சிகிச்சை இல்லை. மூளை பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் மரணம் உறுதியாகிவிடும். ஆனால் தடுப்பூசி உள்ளது. எனவே நாய்கடிக்கு ஆளானவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கோழிக்கால் கொடுப்பதை தவிர்க்கவேண்டும்
கோழிக்கால் போன்றவைகளை இறைச்சி கடைகளில் இருந்து பெற்று வேக வைக்காமல் நாய்களுக்கு உணவாக போடுகின்றனர். இதனை சிலர் சமூக பணியாக கருதி செய்து வருகின்றனர். இதன் காரணமாக பச்சை மாமிசத்தை உண்ணுகின்ற நாய்களுக்கு வெறித்தன்மை அதிகரித்து அவை சாலையில் செல்கின்ற மனிதர்களை பதம்பார்க்கிறது. இப்படி செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
தடுப்பூசி கட்டாயம்
நாய் கடிக்கு ஆளானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை. கடிப்பட்ட நாள், 3ம் நாள், 7ம் நாள், 14ம் நாள், 28 ம்நாள் ஆகிய நான்கு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
The post குமரி மாவட்டத்தில் மாதம்தோறும் நாய் கடிக்கு 1500 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.