*மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பறக்கை குளத்து பாசன பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என்று இருபோக சாகுபடி நடைபெறுகிறது. ஜூன் மாதம் அணைகள் பாசனத்திற்கு திறக்கப்பட்டு கன்னிப்பூ சாகுபடி நடைபெறும்.
ஆகஸ்ட் மாதம் கன்னிப்பூ அறுவடை பணிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபரில் கும்பப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று நிறைவு பெறும். தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.
மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் வரை கும்பப்பூவில் சாகுபடி நடைபெற்றது. இந்தநிலையில் முன்கூட்டியே சாகுபடி பணிகள் நடைபெற்ற குளத்து புரவு பகுதிகளான பறக்கை குளம்-1, 2, 3 ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடி பணிகள் நிறைவு பெற்றிருந்த நிலையில் நெல் வயல்களில் தற்போது நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன. இங்கு சுமார் 1500 ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதர பகுதிகளிலும் விரைவில் நெல் அறுவடை பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நல்ல காலநிலை உள்ளதாலும், நல்ல மகசூல் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக பறக்கை பகுதியை சேர்ந்த விவசாயி ரவி என்பவர் கூறியதாவது:
பறக்கை பத்தில் சிஆர் 1001 சப் 1, சிஆர் 1009 சப் 1 ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது பொன்மணியில் கிராஸ் ரகம் ஆகும். பொன்மணி 6 மாதம் என்றால் இது ஐந்தரை மாதம் கொண்டது ஆகும். மேலும் ஆடுதுறை 47 ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதிசாரத்தில் உள்ள கேவிகேவில் இருந்து விதை நெல் தந்தார்கள். எனக்கு 19 கிலோ கிடைத்தது. அதை கொண்டும் நெல் நடவு செய்யப்பட்டிருந்தது. மிகவும் சன்ன ரகம் இது ஆகும். இதனை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல மகசூல் உள்ளது . பயிர் இன்னும் அறுவடைக்கு வரவில்லை. அறுவடைக்கு வரும்போது மகசூல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் டிபிஎஸ் 3 வழக்கமாக இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் பாரம்பரிய ரகங்களான கொல்லம் சம்பா, கருப்பு கவுனி, கொட்டாரம் சம்பா போன்ற ரகங்களையும் இங்கு தங்கள் சொந்த தேவைகளுக்காகவும், பாரம்பரிய ரகங்களை பாதுகாக்கவும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு 20 நாட்கள் வரை அறுவடை நீடிக்கும்.
நெல் அறுவடை இயந்திரம் மூலமே அறுவடை பணிகள் நடக்கிறது. அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1600 வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த முகவர் மூலமாக இயந்திரங்களை கொண்டுவந்து வயல்களில் அறுவடை செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொள்முதல் நிலையங்கள் திறப்பு
பறக்கையில் நெல் கொள்முதல் 5 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. மேலும் புத்தளம் நெல் கொள்முதல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கான தளவாடங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். நெல் தற்போது குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.2418 சிவில் சப்ளை கார்பரேஷனில் கொள்முதல் செய்கின்றனர்.
சன்ன ரகத்திற்கு கூடுதலாக ரூ.100 கிடைக்கும். வெளி மார்க்கெட்டில் ரூ.2000 முதல் ரூ.2100 வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். வெளி மார்க்கெட்டைவிட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்கின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post குமரி மாவட்டத்தில் 1500 ஏக்கரில் கும்பப்பூ அறுவடை தொடக்கம் appeared first on Dinakaran.