கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் மேம்பாலத்தில் திடீரென பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவரின் 2 காலும் முறிந்தன. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை 7 மணி அளவில் வந்துகொண்டிருந்தது. திடீரென லாரி பழுதானதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை சாலை மேம்பாலத்தின் மீது டிரைவர் நிறுத்திவைத்துள்ளார். அப்போது, சென்னை செங்குன்றத்திலிருந்து ஆந்திர மாநிலம் சிட்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு லோடு ஏற்றி சென்ற ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட லாரி, பழுதாகி நின்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லோடு லாரி ஓட்டி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுயபால் (43) என்பவரின் 2 கால்களும் லாரிகளுக்கு இடையில் சிக்கியுள்ளது. இதனால் வலியால் துடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடியும் டிரைவர் சுயபாலை மீட்க முடியவில்லை. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு டிரைவரை மீட்டனர். ஆனால், லாரி டிரைவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுயபாலை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
The post கும்மிடிப்பூண்டி சிப்காட் மேம்பாலத்தில் இன்று காலை பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: டிரைவரின் 2 கால்களும் முறிந்தன appeared first on Dinakaran.