சென்னை: விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிகிறது. தொடர்ந்து எழுத்து தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒரு மாதம் கால அவகாசம் நாளை மறுநாளுடன்(24ம் தேதியுடன்) முடிகிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எந்தவித சிரமமும் அடையக்கூடாது என்பதால் விரிவான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது.
தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 12ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். கடந்த 2024ம் ஆண்டு குரூப் 4 பதவியில் 9491 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்தனர். அதே போல இந்தாண்டு நிரப்பப்பட உள்ள தேர்வுக்கும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பித்துள்ளனர். எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விபரத்தை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிகிறது appeared first on Dinakaran.