நெல்லை: குறுக்குத்துறை முருகன் கோயிலின் செப்புப்பட்டயம் ஒன்றை மனோன்மணியம் சுந்தரனார் தொல்லியல் மாணவி ஒருவர் கண்டுபிடித்து உள்ளார். அந்த கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற வைரம் பதித்த தங்க வேல் வருகிற 31ம் தேதியோடு 75வது ஆண்டை தொடுவதாக செப்புப்பட்டய தகவல் தெரிவித்து உள்ளது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். முருகனை பண்டைய காலம் முதல் தமிழ்கடவுளாக வழிபாடு நடத்தப்பட்டு வரப்படுகிறது. பக்தி மிகுதியால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் முருகனுக்கு பிரமாண்ட கோயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக செல்வந்தர்கள் விலை உயர்ந்த பொருட்களை நன்கொடை செய்து முருகன் அருள் பெற்றதாக ஐதீகம்.
அந்த வகையில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட வைரம் பதித்த தங்க வேல் முக்கிய விழாக்களில் மட்டும் உச்ச கட்ட பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மீனாவின் ஆராய்ச்சியில் அந்த வைரம் பதித்த தங்க வேல் குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த மாணவி குறுக்குத்துறை முருகன் கோயிலின் தொன்மையை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்தார். இதில் கோயிலுக்கென பழமையான செப்புப்பட்டயம் இருப்பதாக மாணவிக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கண்டறிய மாணவி முயன்றார். இதன் விளைவாக அந்தச் செப்பேடு திருவாவடுதுறை ஆதினம் வசம் இருப்பதை அறிந்து ஆதினத்தின் உதவியுடன் செப்புப்பட்டயத்தை மாணவி ஆய்வு செய்தார்.
தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் உதவி செய்தனர். அந்தச் செப்பேடு 1950ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டது எனவும், 10.5 செ.மீ நீளம், 31.5 செ.மீ அகலத்துடன் கூடிய இச்செப்பேடு முருகர் துணை என்று தொடங்குவதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் தொல்லியல் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘இந்தக் கோயிலுக்குப் பழைய வைரம், பழையபச்சை, பழைய சிவப்பு பதித்த தங்கவேல் ஒன்றும், பழையபச்சை, பழையசிவப்பு பதித்த சிவலிங்க கெவுடு ஒன்றும், நற்பவழ மாலையில் சிவப்பு பதக்கம் கோர்த்து ஒன்றும் வழங்கப்பட்டது. இதனை டி.எஸ். சித்தம்பரம், அவரது மனைவி கனகசங்கரவடிவு அம்மாள் ஆகியோர் சுக்கிர வாரத்தில் நன்கொடையாக அளித்தனர் என்ற தகவலுடன் செப்புப்பட்டயம் பொறிக்கப்பட்டு உள்ளது’’ என்றனர்.
மேலும் அதில் அந்த செப்பு பட்டயத்தை வடிவமைத்தவர் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சி.சு.செல்லையா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர். இந்த தகவல்களின் அடிப்படையில், வருகிற 31ம் தேதியில் (ஞாயிறு) இந்தச் செப்பேடு தனது 75 ஆண்டைத் தொடுகிறது என்பது சிறப்புக்குரியது. அதாவது வைரம் பதித்த தங்க வேலுக்கு 75வது வயது தொடங்கும் என்றும், அதுகுறித்து தொல்லியல் மாணவி விரிவான ஆராய்ச்சி கட்டுரை தயாரித்து உள்ளதாகவும் தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தச் செப்பேடு ஆய்வில் ஈடுபட்ட மாணவி மீனா மற்றும் பேராசிரியர்களை துணைவேந்தர் சந்திரசேகர், ெதால்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.
The post குறுக்குத்துறை முருகன் கோயிலின் செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு; வைரம் பதித்த தங்க வேலுக்கு வயது 75: தொல்லியல் மாணவி ஆராய்ச்சியில் தகவல் appeared first on Dinakaran.