சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. கடந்த ஆண்டில் வேளாண் துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது.
2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேளாண் துறையும் மைனஸ் 0.09% வளர்ச்சி அடைந்துள்ளது. உழவுத் தொழிலின் வளர்ச்சியை மட்டும் பார்த்தால் மைனஸ் 5.93 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல், காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
The post குறுவைத் தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.