வாஷிங்டன் : குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா முடிவு செய்துள்ளது. செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்க நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்கள் இடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது. திறன் அடிப்படையில் தனது ஊழியர்களை அண்மையில் வகைப்படுத்திய மெட்டா நிறுவனம், குறைந்த செயல்திறன் கொண்ட 3,600 பேரை அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளது.
இவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள மெட்டா, தகுதி உடைய புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு குழுமத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க் மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. மெட்டா குழுமத்தில் தற்போது 72,400 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே குறைந்த செயல்திறன் கொண்ட பணியாளர்களை நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது.
The post குறைந்த செயல்திறன் கொண்ட 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பேஸ்புக், வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா முடிவு!! appeared first on Dinakaran.