*7 பேரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார்
கேடிசி நகர் : குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லை கோர்ட்டில் போலீசார் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களை விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைத்தனர்.நெல்லை கோர்ட் முன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஜராக வந்த வாலிபர், பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் கோர்ட் முன்பு நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் கோர்ட் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லையில் சாதி ரீதியான பல்வேறு கொலைகள் பழிக்குப்பழியாக நடந்துள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய பல்வேறு தரப்பினர் கோர்ட்டில் ஆஜராவதற்காக வருகின்றனர். அவர்களை பழிவாங்குவதற்காக சதி திட்டம் தீட்டப்படுவதாக உளவுப்பிரிவு மூலம் உயரதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி, நெல்லை கோர்ட்டில் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். நேற்று கோர்ட்டில் மானூர் வழக்கு தொடர்பாக எஸ்டேட் மணி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் சிலர் கோர்ட்டுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், உதவி கமிஷனர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நீதிமன்றத்திற்கு வருபவர்களை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டன. அவை கோர்ட் வளாகம் முழுவதையும் சுற்றி வந்து கண்காணித்தன.
அதில் பதிவாகி இருக்கும் புட்டேஜை உயரதிகாரிகள் கண்காணித்து கோர்ட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து செல்கின்றனர் என கண்காணித்தனர். சந்தேகப்படும்படியாக அங்கு உலா வந்த 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் கோர்ட்டுக்கு எதற்காக வந்தோம் என்பதை உரிய காரணங்களுடன் தெரிவித்த நிலையில், அவர்களை விடுவித்தனர். அதில் இருவர் எஸ்டேட் மணியை சந்திக்க வந்ததாக தெரிவித்தனர்.
கோர்ட்டில் சந்திப்புகளை நடத்த கூடாது என போலீசார் எச்சரித்தனர். சந்தேக நபர்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக இதுபோன்று தினமும் டிரோன் கேமராக்கள் பறக்க விடப்படும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோர்ட்டிற்கு ஆயுதங்களுடன் வந்தால் அவர்களை சுட்டுப்பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லை கோர்ட்டில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.