புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் தலைமையில் இந்தப்போராட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பினை மீற முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனிடையே காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மீதான இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமித் சாவ்தா தெரிவித்துள்ளார்.