சென்னை: குற்ற வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் தலைமறைவு குற்றவாளிகள் 1258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை; சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழக்குகளில், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகவுள்ள, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1258 குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற நிகழ்வுகளில் தொடர்புடைய குற்றவாளிகள், வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் சென்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த குற்றவாளிகளுக்கு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வடக்கு, தெற்கு கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் 4 சென்னை காவல் மண்டல இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் நடந்தது.
இதையடுத்து 2025ம் ஆண்டு ஏப்ரல் வரையில் கிழக்கு மண்டலத்தில் 414 குற்றவாளிகளும், தெற்கு மண்டலத்தில் 224 குற்றவாளிகளும், வடக்கு மண்டலத்தில் 288 குற்றவாளிகளும், மேற்கு மண்டலத்தில் 292 குற்றவாளிகளும், மத்திய குற்றப்பிரிவில் 40 குற்றவாளிகளும் என மொத்தம் 1,258 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நீதிமன்ற விசாரணை வழக்குகள் முன்னேற்றம் குறித்து வாரம் தோறும் உயரதிகாரிகள் உரிய விபர ஆய்வு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல கடந்த 2024ம் ஆண்டு கிழக்கு மண்டலத்தில் 1,146 குற்றவாளிகளும், தெற்கு மண்லத்தில் 869 குற்றவாளிகளும், வடக்கு மண்டலத்தில் 1,392 குற்றவாளிகளும், மேற்கு மண்டலத்தில் 1,748 குற்றவாளிகளும், மத்திய குற்றப்பிரிவில் 434 குற்றவாளிகளும் என மொத்தம் 5,589 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடந்த 2000 முதல் 2012 ஆண்டு வரை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொலை, ஆதாய கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற முக்கிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் கொலை வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளும், ஆதாயக்கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளும், கொள்ளை வழக்கில் 1 குற்றவாளியும், வழிப்பறி வழக்கில் 27 குற்றவாளிகளும், கொலைமுயற்சி வழக்குகளில் 25 குற்றவாளிகளும் என மொத்தம் 66 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது சிறப்பான பணியாகும்.
The post குற்ற வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் தலைமறைவு குற்றவாளிகள் 1258 பேர் கைது: சென்னை காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.