நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரன்புதூரில் கடந்த 2004ம் ஆண்டு தனியார் பங்களிப்புடன் காமராஜர் அரங்கம் என்ற பெயரில் படிப்பகம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் குலசேகரன்புதூர் சந்திப்பில் நாஞ்சில் புத்தனார் சானல் கரையோரம் அமைந்துள்ளது. இந்த படிப்பகத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கால்வாயில் அதிக தண்ணீர் செல்லும்போது கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டிடம் உறுதி தன்மையை இழந்தது. இதனால் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் மண்ணில் புதைந்தது. அந்த கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.
கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் என்ற நிலையில் இருந்து வருகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த 12.8.2004ம் ஆண்டு காமராஜர் பெயரில் படிப்பகம் கட்டப்பட்டது. பல புத்தகங்கள், செய்தி தாள்கள் இங்கு வந்தன.
இதனை குலசேகரன்புதூர் மக்கள் மட்டும் மன்றி பக்கத்து ஊரை சேர்ந்தவர்களும் வந்து படித்துச்செல்வார்கள். கட்டிடத்தை தொட்டு கால்வாய் செல்வதால், கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் இங்கு யாரும் படிக்க வருவதில்லை. அந்த கட்டிடத்தை தொட்டு சானலில் படித்துறை உள்ளது. இந்த படித்துறையை அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்து உயிர்பலியாவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிடத்தை பாதுகாப்புடன் அகற்றிவிட்டு, அந்த இடத்தில் உறுதியுடன் புதிய படிப்பகம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post குலசேகரன்புதூரில் ஆபத்தான நிலையில் படிப்பக கட்டிடம் appeared first on Dinakaran.