நாமக்கல்: “குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைக்கிறார்கள்” என பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சனம் செய்தார்.
திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க ஆசைப்படவில்லை. அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க ஆசைப்படுகிறோம். இதுவரை கல்வி கற்ற அனைவரும் இரு மொழிக் கல்வியில்தான் கல்வி கற்றுள்ளோம். எதற்காக மாணவ, மாணவிகளுக்கு இதனை திணிக்க வேண்டும். அவர்கள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். இது கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.