பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு விடுமுறை நாட்களையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியார் அணைக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை, ஓரளவு இருந்தது. அதன் பின் பிப்ரவரி மாதத்திலிருந்து வெயிலின் தாக்கத்தால், முக்கிய விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.
மேலும், கோடை வறட்சியால் கவியருவியில் தண்ணீர் இல்லாததால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரமாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமானது. கடந்த சில மாதமாக நாள் ஒன்றுக்கு சுமார் அதிக பட்சமாக 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் விடுமுறை நாட்களில் 3,500 பயணிகளும் வந்திருந்தனர். ஆனால் தற்போது விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், பிற நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
நேற்று முன்தினம் சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. அதிலும் நேற்று, திருப்பூர் மற்றும் ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அணையின் மேல்பகுதியில் வெகுநேரம் சுற்றிபார்த்துவிட்டு, பின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் பல மணிநேரம் பொழுதை கழித்தனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஆழியார் அணையிலிருந்து ஆற்றுக்கு, பூங்கா வழியாக செல்லும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சிறிதளவு தண்ணீரே சென்று கொண்டிருந்தாலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டனர்.
மேலும், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்ட செயற்கை நீரூற்றை பார்த்து ரசித்ததுடன், சிலர் மீன்போன்ற செயற்கை நீரூற்றில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 2 நாட்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குதுகுலம் ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.