மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், ரேஷன் கடை இல்லாததால் குடும்ப அட்டைத்தாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நீண்ட தூரம் உள்ள கூட்டுறவு சொசைடிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், வளவந்தாங்கல் செல்லும் சாலையொட்டி பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2022-2023ம் ஆண்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த கடையை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், அப்பகுதி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட தூரம் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘மின் இணைப்பு கொடுக்காமல் உள்ளதாகவும், மின் இணைப்பு கொடுக்கப்பட்டவுடன் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினர்.
கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் ரேஷன் கடைக்கு முன்பு இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக தலையிட்டு, காலம் தாழ்த்தாமல் பொதுமக்கள் நலன் கருதி, மின் இணைப்பு பெற்று ரேஷன் கடை கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.