புதுடெல்லி: பிஹாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று, தவறுதலாக கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
பிஹாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அடர்ந்த காடு என்பதால், மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை. இரவு நேரம் என்பதால், அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் அச்சமடைந்துள்ளனர். அதோடு, காரிலேயே இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகள் உட்பட ஆறு-ஏழு பேர் அக்காரில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.