கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பகுதிகளில் நேற்றிரவு பெஞ்சல் புயல் காரணமாக இன்று காலை வரை பெய்த கனமழையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. மேலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், உதயசூரியன் நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் நகரமன்றத் தலைவர் எம்கேடி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து, வீடுகள் மற்றும் சாலைகளில் விழுந்த கிடந்த
மரங்களை வெட்டி முழுமையாக அகற்றினர். அனைத்து வீடுகளிலும் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு பிரியா நகரில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் வெள்ளம் புகுந்தது. மேலும் மின்தடை செய்யப்பட்டதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை, பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம், சதானந்தபுரம், அண்ணா நகர், எஸ்.எம் நகர், மப்பேடுபுத்தூர், எஸ்பி அவென்யூ பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொண்டது. அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து வரலட்சுமி மதுசூதனன் நேரில் விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் தங்கவைத்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்.
அவருடன் காட்டாங்குளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஏவிஎம்.இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, சசிகலா, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீ சீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா ஆகியோர் கொட்டும் மழையில் களப்பணியில் ஈடுபட்டனர். ஆதனூர் ஊராட்சியில், படப்பை செல்லும் சாலையில் மழை காரணமாக மின்மாற்றியின்மீது மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன், துணை தலைவர் செல்வி ரவி ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர், ராகவேந்திரா தெருவில் மின்கம்பிகள்மீது மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவற்றை ஊராட்சி மன்ற தலைவர் தீபக் (பொறுப்பு) தலைமையில் ஊழியர்கள் வெட்டி அகற்றினர். கூடுவாஞ்சேரி உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மறைமலைநகர் உட்கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஊழியர்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரிசெய்தனர். பின்னர் இன்று காலை 7 மணியளவில் சீரான மின் வினியோகம் துவங்கியது.
இதுதவிர, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு உட்பட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் நேற்றிரவு பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பூங்காவை பார்வையாளர்கள் சுற்றி பார்க்க முடியாத அவலநிலை ஏற்பட்டது. இதையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கூடுவாஞ்சேரி பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வெள்ளம்: வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை appeared first on Dinakaran.