புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகவே யமுனை நதி மாறியுள்ளது. முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டை யமுனை நதியில் மூழ்கச் செய்து, ஆம் ஆத்மி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பாஜக நூதன தாக்குதல் தொடுத்துள்ளது.
சனிக்கிழமை காலையில் புதுடெல்லி பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா படகு ஒன்றில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டுடன் யமுனை நதியில் பயணம் செய்தார். அவருடன் கட்சி சகாக்களும் இருந்தனர். அப்போது பாஜக வேட்பாளர், கேஜ்ரிவாலின் உருவப் படத்தை ஊடகங்களின் முன்னிலையில் யமுனையில் பல முறை மூழ்கடித்தார்.