சென்னை: கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெறும் வகையில் திட்டங்களைத் தீட்டுவதும், நோய்த் தொற்று பரவாமல் நோய்த் தடுப்பு முறைகளை கையாள்வதும், நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதும், அதன்மூலம் ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்குவதும் மாநில அரசின் கடமை.
கேரள மாநிலத்தில் பாலக்காடு உட்பட மூன்று மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது என்ற செய்தி தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.