ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியில் எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் கேர்ன்ஹில் பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி நீலகிரி வன கோட்டத்தின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள விளக்க மையத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீலகிரி அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எனக் கலைநயத்தோடு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வனப்பகுதியின் மாதிரி, பாறைச் சரிவில் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, சிறுத்தை, நீலகிரி கருமந்தி போன்றவற்றின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. பிங்க் நிற ஆர்க்கிட் மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இவற்றை இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர்.
The post கேர்ன்ஹில் வனத்தில் பூக்க துவங்கிய ஆர்க்கிட் மலர்கள் appeared first on Dinakaran.