விழுப்புரம், ஜூன் 24:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்கும் நான் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். கடந்த 2020ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த அய்யாசாமியுடன் திருமணம் நடந்தது. படிப்பில் அதிகம் ஆர்வம் உள்ள எனக்கு கைக்குழந்தைகள் உள்ளதால் படிப்பை தொடர முடியாமல் போனது.
தமிழ் மீதும் தமிழ் பாடத்தில் உள்ள ஈடுபாட்டின் காரணமாகவும் இளங்கலை தமிழ் முடித்து முதுகலை தமிழ் படித்து தமிழில் முனைவர் பட்டம் பெற விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்ற விரும்புகிறேன். இந்நிலையில் அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பி விண்ணப்பித்தபோது, கடந்த 1.7.2025ல் 24 வயதை நிறைவு செய்தவர்கள் அரசு கல்லூரியில் சேரமுடியாது என கூறுகின்றனர். 14.6.2001ல் பிறந்த எனக்கு 1.7.2025ல் 24 வயது முடிந்து 16 நாட்களே ஆகின்றன.
இளம் வயது திருமணம், கைக்குழந்தையை வளர்ப்பதால் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி இருளர் பெண்ணான எனக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரியில் வயதை காரணம் காட்டி சீட்டு வழங்க மறுப்பதாகவும், 16 நாட்களே அதிகம் உள்ள நிலையில், விளிம்புநிலை மக்களின் நலன் கருதி அரசுக்கல்லூரியில் சேர்ந்து உயர்கல்விபடிப்பை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும். விளிம்பு நிலையில் வாழும் பழங்குடி மக்களின் படிப்பறிவு விகிதம் 54.3 சதவீதம். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், எனக்கு திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பிஏ தமிழ் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post கைக்குழந்தையால் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி இருளர் பெண்ணை கல்லூரியில் சேர்க்க மறுப்பு: விழுப்புரம் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.