சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: விசைத்தறித் துறையில் நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திட விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மூன்றாண்டு பழமையான சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மேம்படுத்தி உயர்மதிப்பு மிக்க துணிகளை உற்பத்தி செய்திட மூலதன மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3000 தறிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாயும், விசைத்தறிக் குழுமங்களில் தறிக் கூடங்கள் பொது வசதி மையம் மற்றும் ஏற்றுமதிக்கான தர ஆய்வுக் கூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்திட 20 கோடி ரூபாயும் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நிதி ஆதாரத்தினை வலுப்படுத்தும் நடைமுறை மூலதனத் தேவைக்கு கடனுதவி வழங்கிட கூடுதலாக 10 கோடி ரூபாய் திரள் நிதியாக வழங்கப்படும்.
மேலும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 673 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகளை ஏற்றுமதி தரத்திற்கேற்ப துல்லியமான முறையில் உற்பத்தி செய்திடவும் ,பொது வசதி மையங்களில் கணினிவழி வடிவமைப்பு மென்பொருளுடன் கூடிய புதிய முழுமையான கணினிமயமாக்கப்பட்ட துணி வெட்டும் இயந்திரங்கள் நிறுவிட 50 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும் இத்திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான முதலீடுகளை ஜவுளி நிறுவணங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.15 கோடி நிதி வழங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கைத்தறி கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கு ரூ.1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post கைத்தறி, துணிநூல் துறைக்கு ரூ.1,980 கோடி ஒதுக்கீடு: விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி appeared first on Dinakaran.