சென்னை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் அத்தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அத்தீவை ஆட்சி செய்வதாக கூறிய நித்தியானந்தா, அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
இதற்கிடையே, கடந்த 2002ம் ஆண்டு நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை மறுத்த நித்தியானந்தா 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவில், ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என கூறி உள்ளார். இதனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான அவரின் புதிய யுக்தி இதுவா? என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை உண்மையிலேயே நித்தியானந்தா இறந்திருந்தால், அவருடைய ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு யார் அதிபதி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
The post கைலாசாவுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் பரபரப்பு தகவல்; ரூ.4000 கோடி சொத்து யாருக்கு? appeared first on Dinakaran.