சென்னை: கொச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம் நடுவானில் பறந்தபோது, வெளிநாட்டு பயணி உள்பட 2 பேர் திடீரென சண்டை போட்டுக்கொண்டனர். அவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் 3 மணி நேரத்துக்கு மேலாக நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இரண்டு பேரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த டேவிஸ் (35) என்பவரும் மற்றும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கஸன் எலியா (32) என்ற பயணியும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு பயணிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்துக்கு இரண்டு பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டது, சக பயணிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனடியாக விமான பணிப்பெண்கள் இருவரையும் அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், இருவரும் அமைதியாகாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதோடு, தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அதை எடுத்து வீசி விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், விமானத்துக்குள் பெரும் பரபரப்பு அச்சம் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள், உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்திற்குள் இரண்டு பயணிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, இருவரும் தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்று தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். அதன் பின்பு நள்ளிரவு 12 மணி அளவில் அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் ரிமோட் பே எனப்படும் விமான நிலைய ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது.
அதன்பின் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, ரகளையில் ஈடுபட்ட இரு பயணிகளையும் பிடித்து முழுமையாக சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் இருவரிடமும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகளும் வெடிகுண்டு நிபுணர்களும் அந்த விமானத்தில் அனைத்து பகுதிகளையும் துருவித் துருவி சோதனை நடத்தினர். அதோடு விமானத்தில் இருந்த மற்ற பயணிகளிடமும் சோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு சோதனைகள் அனைத்தும் நடத்தி முடிய நேற்று அதிகாலை 2.30 மணி ஆகிவிட்டது. அதன் பின்பே அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு, வெடிகுண்டுகள் மிரட்டல் விடுத்த இரண்டு பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏன் சண்டை ஏற்பட்டது, இருவரும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காரணம் என்ன, இவர்களின் பின்னணி என்ன, இருவரும் சென்னைக்கு எதற்காக வந்தனர் என்று துருவி துருவி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கொச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது நடுவானில் விமானத்துக்குள் பயணிகள் அடிதடி: வெடிகுண்டு மிரட்டலால் பீதி, விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.