கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார, தொடர், மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம் இருந்தனர்.
நேற்று வார விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் அதிகளவில் குவிந்தனர். கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் முனை, அப்பர் லேக் வியூ, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்து இயற்கை பசுமை கொஞ்சும் அழகினையும், மலை முகடுகளின் மீது மோதி விளையாடும் வெண் பஞ்சு மேக கூட்டங்களையும் கண்டு ரசித்தனர். இதுதவிர நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததுடன் அங்குள்ள புல் மைதானத்திலும் அமர்ந்து இளைப்பாறினர். மேலும் கொடைக்கானலில் கடந்த பல நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. இங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து அருவி முன்பு நின்று புகைப்படம், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த காரணத்தினால் நேற்று கொடைக்கானலில் பல இடங்களில் அவ்வப்போது வாகன நெரிசலும் ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவில் குளிரும் இருந்து வருகிறது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இந்த இதமான சூழலை ரசித்து வருகின்றனர்.
The post கொஞ்சம் வெயில்… கொஞ்சம் குளிர் கொடைக்கானலில் சூப்பர் கிளைமேட்: கொண்டாட குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள் appeared first on Dinakaran.