கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் ‘பாரா சைலிங்’ எனும் வான் சாகச நிகழ்ச்சி துவங்கியது. இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தற்போது களைகட்டி உள்ளது. நகரில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இம்மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் ‘பாரா சைலிங்’ எனும் வான் சாகச நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
இந்நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. வான் சாகச நிகழ்ச்சியில் நபர் ஒருவர் பயணிக்க ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையை சேர்ந்த தனியார் நிறுவனமான இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் சிவில் ஏவியேஷன் அனுமதி பெற்று பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தனியார் அமைப்பு நிறுவனர் கிளைடர் பாபு மற்றும் 20 நபர்கள் செய்து நடத்தி வருகின்றனர். இந்த பாரா சைலிங்கில் பயணித்தது ஒரு புதிய அனுபவம் என சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மன்னவனூர் பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு பாரா கிளைடிங் எனும் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இங்கு நபருக்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
The post கொடைக்கானலில் வான் சாக நிகழ்ச்சி; பாரா சைலிங்கில் பறந்து சுற்றுலாப்பயணிகள் குஷி: மன்னவனூரில் விரைவில் பாரா கிளைடிங் appeared first on Dinakaran.